ICC மகளிர் எமர்ஜிங் நேஷன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அயர்லாந்தை ஆறு விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மானிலுள்ள கர்வான் விளையாட்டுக் கழக மைதானத்தில் நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில், பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் இலங்கை வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

இந்த வெற்றியுடன், தொடரில் விளையாடிய எட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெற்று, தோல்வியின்றி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது இலங்கை.

96 ஓட்டங்களில் ஆட்டமிழந்த அயர்லாந்து

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொண்டு பெரிய இணைப்பாட்டங்களை உருவாக்க முடியாத அயர்லாந்து, 19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சத்யா சந்தீபனி நான்கு ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சு, அயர்லாந்தைக் குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

துலானியின் ஆட்டமிழக்காத 44 ஓட்டங்கள்

97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை, 12.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தது.

சஞ்சனா கவிந்தி 25 ஓட்டங்களைப் பெற்று ஆரம்பத்தில் பங்களித்தார். பின்னர் இமேஷா துலானி 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கின.

இதன்மூலம் 44 பந்துகள் எஞ்சியிருக்க, இலங்கை வெற்றி இலக்கைக் கடந்தது.

சந்தீபனிக்கு ஆட்ட நாயகி விருது

இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சத்யா சந்தீபனி ஆட்ட நாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய விஷ்மி குணரத்ன தொடரின் நாயகி விருதைப் பெற்றார்.

ஹர்ஷிதா சமரவிக்ரம தலைமையிலான இலங்கை அணி, இறுதிப் போட்டியிலும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கிண்ணத்தை வென்றுள்ளது. பந்துவீச்சில் சந்தீபனியின் பங்களிப்பும், இலக்கைத் துரத்தும்போது துலானியின் உறுதியான ஆட்டமும் இந்த வெற்றியின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.