
பிரித்தானியப் பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் ஹட்டனைச் சேர்ந்த மாணவி, நுவரெலியா உணவகத்தில் தவறவிட்ட கைப்பை தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கைப்பையை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் கந்தபொல பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நவம்பர் 17ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
உணவகத்தில் மறந்துவிட்ட கைப்பை
தீபாவளிக்காக இலங்கை வந்திருந்த மாணவி, நவம்பர் 9ஆம் திகதி குடும்பத்தினருடன் நுவரெலியாவுக்குச் சென்றுள்ளார். உணவகத்தில் மதிய உணவு அருந்திய பின்னர், இருக்கையில் வைத்திருந்த கைப்பையை மறந்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மறுநாள் விசாரித்தபோது, மற்றொரு பெண் கைப்பையை எடுத்துச் செல்லும் காட்சி உணவகத்தின் கண்காணிப்புக் கமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. மாணவியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
பொலிஸில் ஒப்படைத்ததாகத் தம்பதியினர் விளக்கம்
கைப்பையிலிருந்து சில பணத்தாள்களை எடுத்த பின்னர், அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கோரி அன்றைய தினமே பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம் கொடுத்ததாகத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பை தனக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திய மாணவி, பணம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிரித்தானிய வதிவிட அட்டை ஆகியவை காணாமல் போயுள்ளதாகக் கூறியுள்ளார். கைப்பையைப் பெற்ற சார்ஜன்ட், அதனை மற்றொரு உத்தியோகத்தரிடம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். ஆவணங்கள் கிடைக்கும் வரை கைப்பையைப் பொறுப்பேற்க முடியாது என மாணவி கூறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினரை நவம்பர் 23ஆம் திகதி மீண்டும் வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.
👉 மேலும் செய்திகளுக்கு Jaffna Visiting பக்கத்தைப் பின்தொடருங்கள்