இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பொதுவான இலக்குகளை அடைவதற்கும் இந்தியா மற்றும் மொரிஷியஸுடன் இலங்கை நெருக்கமாக இணைந்து செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் அமைப்பின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு இலங்கையின் முழுமையான ஆதரவு

அமைப்பின் முத்தரப்புக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை, உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் முழுமையான ஆதரவை வழங்கும் என அமைச்சர் உறுதியளித்தார்.

2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்த இலங்கை, முழுமையான நம்பிக்கையுடன் அந்தப் பொறுப்பை இந்தியாவிடம் கையளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்

சுதந்திரமான, திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்து சமுத்திரப் பிராந்தியத்தை உருவாக்குவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை, மீள்தன்மை மற்றும் இணக்கத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் தற்போதைய தலைமைத்துவக் கருப்பொருள், பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பொருத்தமானதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையின் தலைமைத்துவக் காலத்தில் பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பங்காண்மை, மக்களை மையப்படுத்திய ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான பிராந்திய ஈடுபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

கொழும்புப் பிரகடனத்தின் தொடர்ச்சியாக டெல்லிப் பிரகடனம்

கொழும்புப் பிரகடனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு டெல்லிப் பிரகடனம் அமைய வேண்டும் என விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தியா மற்றும் மொரிஷியஸுடன் இணைந்து அமைப்பின் எதிர்காலப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.