புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தும் பாடசாலை மட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று, நவம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம், கல்விச் சீர்திருத்தச் செயன்முறை தொடர்பான அடிப்படைப் புரிதலைப் பாடசாலைப் பணியாளர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம்

கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கம், அவற்றின் பின்னணி மற்றும் பாடசாலை மட்டத்தில் அவை தொடர்பாக அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் குறித்து இந்த அமர்வுகளில் அறிமுகம் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், மேலதிக விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் மற்றும் விழிப்புணர்வு முறைமைகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்படவுள்ளது. இதற்குத் தேவையான கற்றல் ஆவணங்கள் அனைத்தும் இணையவழி ஊடாக அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிபர்களுக்கான பயிற்சியைத் தொடர்ந்து அடுத்த கட்டம்

இந்த விழிப்புணர்வுத் திட்டத்திற்கு முன்னதாக, நவம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கான பயிற்சிகள் நடத்தப்பட்டன. அனைத்துக் கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் 100 மத்திய நிலையங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதில் பெற்ற பயிற்சியின் அடிப்படையில், பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தும் அமர்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான தயார்ப்படுத்தல்களும் வழங்கப்பட்டன.

கலைத்திட்டம் மற்றும் மதிப்பீடுகள் குறித்த புரிதல்

தேசிய விழிப்புணர்வுத் திட்டத்தில், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளுடன் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டச் சட்டகம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிர்வாகம், பௌதிக வளங்களின் அபிவிருத்தி, பாடசாலை மட்ட மதிப்பீடுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட துறைகளும் தெளிவுபடுத்தல் வேலைத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் கல்வித்துறையினருக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.

பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு

இந்த நிகழ்ச்சித்திட்டத் தொடரின் அடுத்த கட்டமாக, பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரையான காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருத்தமான நாட்கள் தெரிவுசெய்யப்பட்டு, பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டச் சட்டகம் குறித்த புரிதலைப் பெற்றோர்களுக்கும் வழங்குவதே இந்தக் கட்டத்தின் நோக்கமாகும்.