பூமிக்குத் திரும்பும் வாய்ப்பில்லாத செவ்வாய்ப் பயணத்தில் பங்கேற்கத் தயாராக இருந்த ஒரு பல்கலைக்கழக மாணவியின் கதை, 2015ஆம் ஆண்டு உலகின் கவனத்தை ஈர்த்தது. அந்த மாணவி லாரல் கே. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்துவந்த அவர், Mars One திட்டத்தின் அடுத்தகட்டத் தேர்வுக்கான 100 பேரில் ஒருவராக இடம்பெற்றார்.

ஆனால், அவர் செவ்வாய்க்குப் புறப்படுவதற்கு உறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர் அல்ல. மேலும் பல தேர்வுகளைக் கடக்க வேண்டிய விண்ணப்பதாரராகவே இருந்தார்.

செவ்வாயில் நிரந்தரமாக வாழும் திட்டம்

நெதர்லாந்தைச் சேர்ந்த Mars One அமைப்பு, செவ்வாயில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் குடியிருப்பை உருவாக்க முன்மொழிந்தது. அதன் திட்டத்தில் பூமிக்குத் திரும்பும் பயணம் இடம்பெறவில்லை.

தேர்வு செய்யப்படுபவர்கள் செவ்வாயிலேயே வாழ்ந்து, பணியாற்றி, ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்பதே அமைப்பின் எண்ணமாக இருந்தது. மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பாக லாரல் கே இதனைக் கருதினார்.

வயது குறித்த தகவலில் முக்கிய வேறுபாடு

டியூக் பல்கலைக்கழகம் 2015 பெப்ரவரியில் வெளியிட்ட செய்தியில் லாரல் கே 20 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அவர் இயற்பியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான முன்னாயத்துக் கல்வியில் ஈடுபட்டிருந்ததாகப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தெரிவித்துள்ளது.

எனவே, “21 வயதில் பூமியை விட்டுப் புறப்படுவார்” என்றும், “இயற்பியல் மற்றும் வேதியியல் படித்தார்” என்றும் பரவும் தகவல்கள் அந்தப் பதிவுகளுடன் பொருந்தவில்லை. தேர்வில் இடம்பெற்ற காலத்திலிருந்த வயதும், எதிர்காலப் பயணத்திற்கான வயதும் ஒன்றல்ல.

ஆறு பில்லியன் டொலர் என்பது மதிப்பீடு

முதல் நான்கு பேரைச் செவ்வாயில் தரையிறக்கும் ஆரம்பப் பயணத்திற்கு சுமார் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என Mars One மதிப்பிட்டிருந்தது. அந்தத் தொகை போதுமானதா என்பது விண்வெளித் துறையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இது திட்டத்திற்குத் தேவையான முழு நிதியும் ஏற்கெனவே கிடைத்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை. விளம்பரங்கள், அனுசரணைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் உள்ளிட்ட வழிகளில் நிதி திரட்டுவதற்கே திட்டமிடப்பட்டது.

பின்னர் என்ன நடந்தது?

பயண அட்டவணைகளும் முன்னோடி விண்கலத் திட்டங்களும் தொடர்ந்து தாமதமடைந்தன. 2019ஆம் ஆண்டு, நிதி திரட்டுவதற்குப் பொறுப்பாக இருந்த Mars One Ventures நிறுவனம் திவாலாகி கலைக்கப்பட்டது. இதனைத் திட்டத்தின் நிறுவனர் பாஸ் லான்ஸ்டார்ப்பும் உறுதிப்படுத்தினார்.

இதனால் திட்டத்தின் நிதி ஆதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. லாரல் கேயின் கதை, செவ்வாய்க்குச் சென்ற ஒருவரின் வரலாறு அல்ல; மற்றொரு உலகில் வாழும் வாய்ப்பிற்காக விண்ணப்பித்த இளம் மாணவியின் நிறைவேறாத கனவின் பதிவு ஆகும்.