
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெறச் செல்லும் பொதுமக்கள், நவம்பர் 23ஆம் திகதி முதல் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
அன்றுமுதல் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் அனைத்துப் பொதுமக்கள் சேவைகளும் முன்பதிவு முறைமையின் கீழ் மாத்திரம் முன்னெடுக்கப்படும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது. தேவையற்ற காத்திருப்பைக் குறைத்து, சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த முன்பதிவு வாய்ப்புகள் அதிகரிப்பு
புதிய நடைமுறைக்கு ஏற்ப அதிகமானோருக்குச் சேவைகளை வழங்குவதற்காக, நாளாந்த முன்பதிவு வாய்ப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்புக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முன்னரை விட அதிகளவான சேவை பெறுநர்கள், தங்களுக்குப் பொருத்தமான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு அலுவலகத்திற்கு வருகை தர முடியும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
பொதுமக்கள் தொலைபேசி அல்லது இணையவழி ஆகிய இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள 011 2 117 116 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொள்ள முடியும்.
இணையவழியில் முன்பதிவு செய்ய விரும்புவோர், திணைக்களத்தின் அதிகாரபூர்வ முன்பதிவு இணையத்தளத்திற்குச் செல்லலாம்.
இணையத்தளத்தில் கோரப்படும் விவரங்கள்
முன்பதிவுப் படிவத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கம், பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளிடுவதற்கான வசதிகள் உள்ளன. தொலைபேசி இலக்கத்தைச் சரிபார்க்கும் நடைமுறையும் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சேவையைப் பெறவுள்ள அலுவலகம், தேவையான சேவை, வருகை தரும் திகதி மற்றும் நேரம் ஆகியவற்றைத் தெரிவுசெய்வதற்கான பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. dmtappointments.dmt.gov.lk
அதிகாலை முதல் வரிசையில் காத்திருக்க வேண்டாம்
நவம்பர் 23ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்திற்கு அருகில் அதிகாலையிலேயே வந்து தேவையற்ற விதத்தில் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சேவைகளைப் பெறுவதற்காகப் பயணிப்பதற்கு முன்னர், முன்பதிவு முறைமையைப் பயன்படுத்தி திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும் நேரத்தைச் சேமிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகம் வழங்கும் அனைத்துப் பொதுமக்கள் சேவைகளுக்கும் பொருந்தும்.