இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கப்படும் பொலிஸாரின் கொடுப்பனவு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 10,000 ரூபா இடர் கொடுப்பனவை வழங்குவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்ததுடன், அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டிருந்தது.

எனினும், இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக புதிய கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்துவதில்லை என்ற கொள்கைத் தீர்மானத்தினால், மாற்று வழிமுறையின் கீழ் குறித்த தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது உணவு மற்றும் தங்குமிடக் கொடுப்பனவாக வழங்கப்படும் 28,200 ரூபாவை 38,200 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக 10,000 ரூபா கிடைக்கும் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

65,000 மின்சார மோட்டார் சைக்கிள்கள்

இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டம் தொடர்பிலும் அமைச்சர் பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் முதல் பொலிஸ் பரிசோதகர் தரத்திலுள்ள அதிகாரிகள் வரை இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளனர்.

இதுவரை சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களுக்குத் தேவையான மின்சார மோட்டார் சைக்கிள்களின் வகைகளைக் குறிப்பிட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

வட்டியில்லா கடன் வசதி

இத்திட்டத்துடன் தொடர்புடைய வரிகளை பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியத்தின் ஊடாகச் செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொள்வதற்கான வட்டியில்லா கடன் வசதிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களும் நிறைவடைந்துள்ளன.

தற்போது அதற்கான நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தகுதியுடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விரைவில் மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.