
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (30) திங்கட்கிழமை வழமைபோன்று இயங்கும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.
இன்று (29) ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், நாளை ஆரம்பமாகும் இறுதி வாரத்திற்கான கல்விச் செயற்பாடுகளை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சைகள் வழமைபோன்று நடைபெறும்
நாளைய தினத்தை வழமையான பாடசாலை தினமாகக் கருதுமாறும், மாணவர்கள் வழமைபோன்று பாடசாலைகளுக்குச் செல்லுமாறும் பெற்றோர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் அனைத்தும் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில பாடசாலைகள் ஆண்டிறுதிப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஏனைய பாடசாலைகள் பல்வேறு இணைப்பாடவிதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இதனால், திட்டமிடப்பட்ட பாடசாலை நடவடிக்கைகளில் மாற்றங்களையோ தடங்கல்களையோ ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை நாட்களை மேலும் குறைக்க முடியாது
தித்வா புயல் உள்ளிட்ட விசேட சூழ்நிலைகளால் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, இவ்வாண்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த 197 பாடசாலை நாட்கள் ஏற்கனவே 186 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு பாடசாலை நாட்களை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி மூன்றாம் தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்ட அனைத்துக் கல்விச் செயற்பாடுகளையும் முறையாக நிறைவு செய்யுமாறு பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.